ஒரு கிராமத்தில் முத்துச்சாமி குப்புசாமி என்னும் இரண்டு நண்பர்கள் வாழ்ந்தனர். அந்தக் கிராமத்தில் என்ன பிரச்சனை என்றாலும் முத்துசாமி என்பவர் தான் தீர்த்து வைப்பார் அவரிடம் தான் எல்லோரும் முறையிடுவார்கள். அது மட்டும் இல்லாமல் பக்கத்து ஊரில் உள்ள பிரச்சனைகளாக இருந்தாலும் இவர்தான் சென்று தீர்த்து வைப்பார்.
குப்புசாமியும் எப்போதும் இவருடனே தான் இருப்பார். முத்துசாமிக்கு அந்த கிராமங்களில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது. அதைப்போல் குப்புசாமிக்கு அந்த ஊரில் நல்ல மரியாதை இருந்தது. முத்துசாமி ஊரில் இல்லாத நேரத்தில் குப்புசாமி தான் அந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்.
அப்படி இருக்க ஒரு நாள் முத்துச்சாமிக்கு ஒரு சந்தேகம் வந்தது. குப்புசாமி இடம் முத்துசாமி கேட்டார் நம் ஊரில் சகுன தடையாக யாரேனும் இருக்கிறார்களாஅவர் முகத்தில் விழித்தாலே எதுவும் நல்லது நடக்காது என்றுயாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டார்.
உடனே குப்புசாமிக்கு கோபம் வந்தது இருந்தாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை எவ்வளவு புத்திசாலி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் இவர் இப்படி மூடநம்பிக்கையோடு இருக்கிறாரே என்று நினைத்தார் குப்புசாமி. முத்துச்சாமிக்கு நல்ல பாடம் புகட்டவேண்டும் என்று எண்ணினார்.
உடனே குப்புசாமியும் ஆம் நம் ஊரில் ஒரு சலவைத் தொழிலாளி இருக்கிறான் என்று சொன்னார். அப்போது முத்துசாமி அவன் எங்கே அழைத்து வா நான் தூங்கும்போது அவன் என் அறையிலேயே தூங்கட்டும் காலையில் எழுந்தவுடன் அவன் முகத்தில் நான் விழிக்க வேண்டும் அதன் பின் என்ன நடக்கும் என்று நான் பார்க்கிறேன் என்றார் முத்துசாமி. உடனே குப்புசாமி அந்த சலவை தொழிலாளி வீட்டிற்கு சென்று முத்துசாமி வீட்டிற்கு அழைத்து வந்தார்.
அந்த சலவை தொழிலாளியும் ஏதோ பேச்சு வார்த்தைக்காக நம்மளை சும்மா அழைத்து வரச் சொல்லி இருக்கிறார் என்று நினைத்து அவரும் அங்கே சென்றார். அன்று இரவு இருவரும் ஒரே அறையில் தான் தூங்கினார்கள். முத்துசாமி தூங்கி விழிப்பதற்குள் சலவைத் தொழிலாளி கண்விழித்து முத்துச்சாமி முன் அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் முத்துச்சாமியும் கண்விழித்தார் அந்த நேரத்தில் சலவை தொழிலாளி அருகில் இருந்ததால் அவர் முகத்தில் விழித்தார்.
அதன்பின் இன்று என்ன நடக்கும் என்று பார்ப்போம் நீ சென்று வா என்று அந்த சலவை தொழிலாளியை அனுப்பி வைத்தார். காலை எழுந்து சிறிது நேரத்தில் அங்கே ஒரு பஞ்சாயத்து வந்தது. அதை முடித்துவிட்டு உணவு உண்ணலாம் என்று வீட்டுக்குள் நுழைய போகும்போது அடுத்து ஒரு பஞ்சாயத்து வந்தது. அது முடிந்தவுடன் பக்கத்து ஊரிலிருந்து அழைப்பு வந்தது அப்படியே அன்று முழுவதும் அவரால் உணவு கூட உண்ண முடியாத அளவிற்கு பிரச்சனைகள் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு தீர்த்து வைத்துக் கொண்டு இருந்தார். வீடு வந்து சேர இரவு ஆகிவிட்டது.
அதன்பின் யோசனை வந்தது இன்று நாம் அந்த சலவை தொழிலாளியின் முகத்தில்தான் விழித்தோம் அதனால் தான் இன்று நாம் உணவு உண்ண கூட நேரமில்லாத அளவிற்கு அலைச்சல் என்று பயங்கரமாக கோபம் வந்தது. வீட்டிற்கு வந்ததும் அந்த சலவை தொழிலாளியை அழைத்து வரச் சொல்லி அவருக்கு உடனே தூக்கு தண்டனை கொடுக்கச் சொல்லி அறிவித்தார். சலவைத் தொழிலாளி பயத்தில் நடுநடுங்கி விட்டார்.
உடனே அந்த சலவைத் தொழிலாளி குப்புசாமி தேடி சென்று அவரை வீட்டில் சந்தித்தார். ஐயா நீங்கள் என்னை கூப்பிட்டதால்தான் நான் வந்தேன். ஏதோ சும்மா சோதனை செய்வதற்காக என்னை அழைத்து வரச் சொன்னீர்கள் என்று வந்தேன் தூக்கு தண்டனை கொடுக்கச் சொல்லி முத்துசாமி சொல்லிவிட்டார் நீங்கள் தான் என்னை காப்பாற்ற வேண்டும் என்றார் சலவை தொழிலாளி.
உடனே குப்புசாமி முத்துசாமியின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து நீ அந்த சலவை தொழிலாளியின் முகத்தில் விழித்ததால் உனக்கு உணவு உட்கொள்ள கூட நேரமில்லாமல் இருந்தது உண்மைதான் ஆனால் அந்த சலவை தொழிலாளி உன் முகத்தில் விழித்ததால் அவனுக்கு ஏற்பட்ட நிலையை பார்த்தாயா இன்று அவனுக்கு தூக்கு தண்டனை இப்போது யார் சகுன தடையாக இருக்கிறார்கள் என்று கொஞ்சம் யோசிச்சு பாரு என்று குப்புசாமி முத்துச்சாமிக்கு விளக்கினார். அதன் பின் முத்துசாமி தன் தவறை உணர்ந்து சலவைத் தொழிலாளியிடம் மன்னிப்பு கேட்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.