ஒரு ஊரில் ஆதவன் என்பவன் வெகு வருடங்களாக வாழ்ந்து வந்தான் . அவனுக்கு ஊரில் கிடைக்கின்ற அன்றாட வேலைகளை செய்து அவனுடைய வாழ்க்கை நடத்தி வந்தான்.
அவனது பக்கத்து வீட்டுக்காரனும் மாறன் ஆவான். மாறனுக்கோ அவ்வளவு நல்ல எண்ணம் கிடையாது. ஊரில் உள்ளவர்களிடம் வம்பு செய்தல், சண்டை போடுதல், வெட்டி பேச்சு ஆகி செயல்களில் ஈடுபட்டு வந்தான்.
சில நாட்களுக்குப் பிறகு, மாறனுக்கு திருமண வயது எட்டி விட்டது. எனவே மாறனின் அப்பா, அவனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். திருமண நாளைக்கு முன் சமையலுக்கு தேவையான பாத்திரங்களை வாங்க கடைக்கு சென்றான் மாறன் .
ஆனா கடையில் இரண்டு பாத்திரங்கள் கம்மியாக கிடைத்தது. மற்ற இரண்டு பாத்திரங்களுக்கு என்ன பண்ணுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான் மாறன் . அப்போது அவனது பக்கத்து வீட்டுக்காரனான ஆதவனிடம் கடனாக இரண்டு பாத்திரங்களை பெற்றுச் செல்லலாம் என்று யோசனை கிட்டியது.
அவனது வீட்டுக்கு சென்று இரண்டு பாத்திரங்களை வாங்கி வந்தான் மாறன். திருமணம் முடிந்த பிறகு இரண்டு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு ஆதவன் வீட்டிற்கு சென்றான் மாறன். ஏற்கனவே ஆதவனுக்கு கேலி கிண்டல் செய்வதில் மிகவும் ஆர்வம் உள்ளதால் பாத்திரத்தை கொடுக்கும் பொழுது ஒரு சொம்பை சேர்த்து வைத்து கொடுத்தான் .
ஆதவன் அதை பார்த்து நான் இந்த சொம்பை உங்களிடம் கொடுக்கவில்லையே இரண்டு பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன் என்று கூறினான். அதற்கு இவன் நீ கொடுத்த இரண்டு பாத்திரங்களில் ஒரு பாத்திரம் பெண் பாத்திரம் போல அது கர்ப்பமாக இருந்தது என் வீட்டிற்கு வந்ததும் அது பிரசவம் ஆகி ஒரு சொம்பை பெற்றெடுத்தது அதை தான் உன்னிடம் கொடுக்கிறேன் என்று கூறினான்.
மாறன் நம்மிடம் நையாண்டி வேலை செய்கிறான் என்று புரிந்து கொண்டான் ஆதவன்.சில நாட்களுக்குப் பிறகு, ஆதவன் வீட்டில் ஒரு நல்ல காரியம் நடைபெற இருந்தது, அதற்கும் அவனுக்கு இரண்டு பாத்திரங்கள் தேவைப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரரான மாறன் இடம் இரண்டு பாத்திரங்களை கடனாக பெற்றான்.
வீட்டு விசேஷம் முடிந்த பிறகு ஒரு பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மாறன் வீட்டிற்கு சென்றான் ஆதவன். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாறன் நான் உங்களிடம் இரண்டு பார்த்து கொடுத்தேனே? நீங்கள் என்ன ஒரு பாத்திரம் மட்டும் கொடுக்கிறீர்கள் என்று கேட்டான்.
அதற்கோ ஆதவன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு நீங்கள் என்னிடம் இரண்டு பாத்திரம் கொடுத்தீர்கள். ஆனால் அதில் ஒன்று பெண் பாத்திரம் போல, அது கர்ப்பிணியாக இருந்திருக்கும் போல, என் வீட்டிற்கு வந்ததும் அதற்கு பிரசவ வலி எடுத்து இருக்கும் போல இரவு பொழுதில் பிரசவ வலி தாங்க முடியாமல் தாயும் சேயும் இறந்துவிட்டன என்று கூறினான் ஆதவன் .
எனவே அதை நான் நல்லடக்கம் செய்து விட்டேன் என்று மிகவும் வருத்தத்துடன் கூறினான் ஆதவன். ஆஹா நாம் அன்று இவனிடம் செய்த நையாண்டி வேலையை திருப்பி நம்மிடம் செய்கிறானே என்று எண்ணினான் மாறன்.
நான் செய்தது தவறு தான் என்னை மன்னித்து விடுங்கள் என்று என் பாத்திரத்தை என்னிடம் திருப்பிக் கொடுங்கள் என்று மன்னிப்பு கேட்டான் மாறன்.